கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நாளையுடன் (ஆக.8) நிறைவடைய இருக்கிறது. இத்தொடரில் இந்தியா இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என பதக்கங்களை பெற்று 46ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, 121 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு தடகளத்தில் தங்கப்பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றுத்தந்துள்ளார்.
இரண்டாவது தனிநபர் தங்கம்
நவீன ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்தியா 10 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதில், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா (துப்பாக்கிச்சுடுதல்) பெற்ற தங்கம்தான் தனிநபர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம். தற்போது நீரஜ் சோப்ரா, அந்த பட்டியலில் இரண்டாவது வீரராக சேர்ந்துள்ளார். மீதம் உள்ள எட்டு தங்கப்பதக்கங்களும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் பதக்கங்கள்
முதல் நவீனகால ஒலிம்பிக்கான 1896 ஏதென்ஸ் ஒலிம்பிக் தொடர் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரை, இந்தியா 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.