ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களைத் தொடர்ந்து நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது.
இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றதில், 37 வயதான அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 19 வயது கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரெஸ்குவை எதிர்கொண்டார்.
இதுவரை, 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரினா இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று, ஆஸ்திரேலியாவின் மார்க்கரெட் கொர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில் ஆண்ட்ரெஸ்கு தனது நேர்த்தியான ஆட்டத்தால் செரினாவுக்கு சவாலாக இருந்தார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரெஸ்கு 6-3 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது செட்டில் ஆண்ட்ரெஸ்கு 5-1 என்றக் கணக்கில் முன்னிலை வகித்தபோது செரினா தனது ஆட்டத்தால் அந்த செட்டை 5-5 என சமன் செய்ததால், ஆட்டம் பரபரப்புக்கு இட்டுச் சென்றது. இந்த நிலையில், சுதாகரித்துகொண்ட ஆண்ட்ரெஸ்கு அதிரடியாக விளையாடி 7-5 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
இதன்மூலம், ஆண்ட்ரெஸ்கு 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், ஆண்ட்ரெஸ்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் கனடா வீராங்கனை என்ற சாதனைப் படைத்து அசத்தினார்.
அதுமட்டுமில்லாமல், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவிற்குப் பிறகு இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதேசமயம், செரினா வில்லியம்ஸ் இந்தத் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இளம் வீராங்கனையுடன் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். கடந்த ஆண்டில் ஜப்பானின் நவோமி ஒசாகாவிடம் அவர் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.