ஆடவர் டென்னிஸ் அணிகளுக்கான ஏடிபி கோப்பை தொடரின் முதல் சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்றன.
இந்நிலையில், நேற்று சிட்னியில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் தலைமையிலான ஸ்பெயின் அணி, இரண்டாம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிச் தலைமையிலான செர்பியா அணியுடன் மோதியது.
இதைத்தொடர்ந்து, ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டுவா அகுட் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் செர்பியாவின் துசன் லஜோவிக்கை வீழ்த்தினார். இதையடுத்து, நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், நடால் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார். இதனால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை எடுத்ததால் ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது.
இதில், செர்பிய அணி சார்பில் ஜோகோவிச் - டிராய்க்கி இணை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் லோபஸ் - கரெபோ பஸ்டா ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம், செர்பிய அணி 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ஏடிபி கோப்பையை வென்று அசத்தியது.
இதையும் படிங்க: கத்தார் ஓபன் தொடரை வென்ற ரோகன் போபண்ணா ஜோடி!