ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றன. அதில் நட்சத்திர வீரர்களான ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோரின் ஆட்டம் நடைபெறும் என்பதால் இன்று டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதன் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை எதிர்த்து 21 வயதேயான சிட்சிபாஸ் ஆடினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை அனுபவ வீரர் ஜோகோவிச் 6-3 என கைப்பற்ற, இரண்டாவது செட் ஆட்டத்தில் சிட்சிபாஸ் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இரண்டாவது செட்டை 7-5 என சிட்சிபாஸ் கைப்பற்ற, ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஜோகோவிச்சை சிட்சிபாஸ் தனது அதிரடியான ஷாட்களால் திணறடித்தார். கடைசி செட்டை 6-3 என கைப்பற்றிய சிட்சிபாஸ், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஃபெடரரை எதிர்த்து ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் ஆடினார். இதன் முதல் செட் ஆட்டத்தை யாரும் எதிர்பார்க்காதவாறு ஸ்வெரவ் கைப்பற்ற, இரண்டாவது செட்டை டை - ப்ரேக்கர் முறையில் ஃபெடரர் கைப்பற்றினார்.
பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்வெரவ் சிறப்பாக ஆடினார். இறுதியாக மூன்றாவது செட்டை 6-3 என ஸ்வெரவ் கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஒரே நாளில் இருபெரும் நட்சத்திர வீரர்களான ஃபெடரர், ஜோகோவிச் இருவரும் இளம் வீரர்களிடம் தோல்வியடைந்திருப்பது டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: ரோஜர் ஒயின் போன்றவர்... இனிதான் ஆட்டம் இருக்கு