கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய நடால் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் மில்மேனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் நடால் யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டொமினிக் தீம் இத்தாலியின் தாமஸ் ஃபேபியனோவை (Thomas Fabbiano) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை தாமஸ் 6-4 என்ற புள்ளி கணக்கில் தீமை வீழ்த்தினார்.
அதன் பின் இரண்டாவது செட்டை தீம் 6-3 என்ற கணக்கில் தாமஸை வீழ்த்த, அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு செட்டையும் தாமஸ் 6-3, 6-2 என்ற புள்ளி கணக்கில் தீமை வீழ்த்தினார். இதன் மூலம் தாமஸ் ஃபேபியனோ 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் டொமினிக் தீமை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இதற்கு முன் ஆஸ்திரியன் ஓபன் டென்னிஸ் தொடரில் கோப்பையை வென்ற டொமினிக் தீம், தற்போது யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.