உலகின் டாப் 8 வீரர்கள் போட்டியிடும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. 8 வீரர்களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றுப் போட்டிகளில் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறுவர்.
அதன்படி இன்று (நவ.20) நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கிரீஸ் நாட்டின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியில் ரஃபேல் நடால் 6-4 என்ற நேர் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பின்னர் நடைபெற்ற மூன்றாம் செட் ஆட்டத்தில் தனது திறனை வெளிப்படுத்திய நடால் 6-2 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி சிட்சிபாஸிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் ரஃபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆறாவது முறையாக முன்னேறி அசத்தியுள்ளார்.
நாளை நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வை எதிர்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: இனி இந்த வயசு ஆனாதான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் - ஐசிசி திட்டவட்டம்!