2019ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ப்ளோரிடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்விஸ் வீரர் ஃபெடரரை எதிர்த்து தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் மோதினார்.
இதற்கு முன்னர் இவ்விரு வீரர்களும் விம்பிள்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் மோதியபோது, ஃபெடரரை ஆண்டர்சன் வீழ்த்தியதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவிஸ் வீரர் ஃபெடரர் முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றினார். ஆண்டர்சன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஃபெடரரிடன் எதுவும் பலிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஆண்டர்சன்னை சுவிஸ் வீரர் ஃபெடரர் வென்றதையடுத்து, விம்பிள்டன் தொடரின் காலிறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துவிட்டதாக ஃபெடரரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அரையிறுதிப் போட்டியில், ஃபெடரரை எதிர்த்து கனடா வீரர் டெனிஸ் விளையாடவுள்ளார்.