ஏடிபி என்றழைக்கப்படும் தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான அசோசியேஷன் நேற்று டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இரட்டையர் பிரிவில் கனடாவின் ஜுவான் செபாஸ்டியன் கேபல், ராபர்ட் பராஹ் ஆகியோர் 8120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக பிரான்சின் நிக்கோலஸ் மகுட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக இந்தப் பட்டியலில் 96ஆவது இடத்தில் இருந்த இந்திய வீரர் லியாண்டர் பயஸ், ஐந்து இடங்கள் சரிந்து 101ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன்மூலம் 19 வருடங்களுக்குப் பின் அவர் 100 ரேங்க்குகளுக்கு வெளியே சென்றுள்ளார்.
டென்னிஸ் போட்டிகளில் ஐரோப்பிய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாட்டு வீரர்கள்தான் சாம்பியன் மகுடம் சூட முடியும் என்ற நிலையை மாற்றியவர்தான் இந்திய வீரர் லியாண்டர் பயஸ். அதிலும் இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் இவர் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். 90களின் கடைசியிலும் 2000ஆவது ஆண்டின் தொடக்கத்திலும் லியாண்டர் பயஸ், மற்றொரு இந்திய வீரர் மகேஷ் பூபதியுடன் இணைந்து இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் கலக்கினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பத்தாம் இடத்துக்கு வெளியே வந்த லியாண்டர் பயஸ், அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டே வருடங்களில் 50ஆவது இடத்திற்கு வெளியே சென்றார். அவர் கடைசியாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடருக்குப்பின் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுடன் நடக்கவுள்ள டேவிஸ் கோப்பை தொடரில் விளையாடுவதாக சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோஹன் போபண்ணா 38ஆவது இடத்திலும், திவ்ஜி சரண் 46ஆவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரர் பூரவ் ராஜா எட்டு இடங்கள் முன்னேறி 93ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
இதேபோன்று ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குண்ணேஷ்வரன் ஒரு இடம் சரிந்து 95ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுமித் நாகல் (129ஆவது ரேங்க்), ராம்குமார் ராமநாதன் (190ஆவது ரேங்க்), சசி குமார் முகுந்த் (250ஆவது ரேங்க்), சாகேத் மைனேனி (267ஆவது ரேங்க்) ஆகியோர் உள்ளனர்.