துபாயில் நடைபெற்று வந்த ஐடிஎஃப் மகளிர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா & ஜார்ஜியாவின் எகடெரின் கோர்கோட்ஜ் இணை, ஸ்லோவேனியாவின் காஜா ஜுவான் & ஸ்பெயினின் அலியோனா போல்சோவா இணையை எதிர்கொண்டது.
பரபரப்பான இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அங்கிதா ரெய்னா இணை முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் காஜா ஜுவான் இணை கைப்பற்றியது. இதனால் சாம்பியன் பட்டத்தை யார் வெல்வார் என்ற பதற்றம் ஏற்றப்பட்டது.
அதன் பின் நடைபெற்ற மூன்றாம் செட் ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக போராடியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. இறுதியில் அங்கிதா ரெய்னா இணை 10-6 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி காஜா ஜுவான் இணைக்கு அதிர்ச்சியளித்தது.
இதன் மூலம் ஐடிஎஃப் மகளிர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா & ஜார்ஜியாவின் எகடெரின் கோர்கோட்ஜ் இணை 6-4, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் காஜா ஜுவான் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிங்க:பிபிஎல்: ஃபார்முக்கு திரும்பிய ஸ்டோய்னிஸ்; தொடர் வெற்றியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!