கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டிகள், தற்போது மீண்டும் புத்துயிர் பெறத்தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, டென்னிஸ் விளையாட்டின் பிரபல தொடரான பிரெஞ்சு ஓபன் 2020 இம்மாதம் 21ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெற்று வரும் நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என, போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், “பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரை பார்வையாளர்களுடன் நடத்துவதன் மூலம், தொடருக்கான வரவேற்பு அதிகரிக்கும். அதனால் 30 ஏக்கருக்கு குறைவான பரப்பளவில் அமைந்துள்ள ரோலண்ட்-கரோஸ் அரங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து பார்வையாளர்களை அனுமதிக்கவுள்ளோம்.
அதன்படி அமைக்கப்பட்டுள்ள பிலிப்-சேட்ரியர் மற்றும் சுசான்-லெங்லன் தளங்களில் ஐந்தாயிரம் பார்வையாளர்களையும், சைமோன்-மேத்தியூ தளத்தில் 1,500 பார்வையாளர்களையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் தற்போதைய சுகாதார பாதுக்காப்பு வழிகாட்டுதல்களை எளிதாக பின்பற்ற இயலும்.
அதேசமயம் போட்டியைக் காணவரும் அனைத்து பார்வையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஒரே வரிசையில் அமர்ந்திருப்போர் ஒரு நாற்காலி இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” எனறும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:டி20: பட்லரின் அதிரடியில் தொடரை வென்ற இங்கிலாந்து!