உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தியும் வைக்கப்படுகின்றன. முக்கியமாக இந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஐபில் தொடர் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதனிடையே டென்னிஸ் உலகின் முக்கிய கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதிவரை நடக்கவுள்ள மற்றோரு கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆல் இங்கிலாந்து டான் டென்னிஸ் கிளப்பின் தலைமை நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் லூவிஸ் பேசுகையில், '' நான் எதிர்பார்க்காத அளவிற்கு கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படும்.
2020ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட போட்டிகளை நடத்த தீவிரமாக ஆலோசித்துவருகிறோம். அடுத்த வாரத்தில் ஏஈஎல்டிசி (AELTC) அமைப்பின் அவசரக் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் விம்பிள்டன் தொடர் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும்'' என்றார்.
ஏற்கனவே பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பல முன்னணி வீரர்களும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் விம்பிள்டன் தொடர் ஒத்தி வைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் ஒலிம்பிக் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் விம்பிள்டன் தொடரை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விம்பிள்டன் தொடரில் சாதனைகளை தகர்க்கக் காத்திருக்கும் டென்னிஸின் கிங்!