நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச்சுற்றில் உலகின் நட்சத்திர டென்னிஸ் ஜாம்பவானான சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 2-6, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்குகளில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்கிரணை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
இந்த போட்டியின் போது ஃபெடரர், ஆட்டநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்ததாக ஆட்டநடுவர் அவருக்கு போட்டியின் போது எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து ஆட்ட முடிவுக்கு பின் செய்தியாளர்களைச் சாந்தித்த ஃபெடரர், ஆட்டநடுவர் பல மொழிகளை இணைத்து கோர்வையாகப் பேசினார். எனக்கு அந்த மொழி புரியவில்லை. இனி நான் வரிசையாளர்களின் மொழியைக் கற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும் அச்சமயம் நான் விரக்தி நிலையில் இருந்ததால் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். நான் வெற்றி பெற மிகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் போது அவர் கோர்வையாகப் பேசியதால்தான் அப்படி நடந்துகொண்டேன் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து டென்னிஸ் விதிப்படி போட்டியின் போது ஆபாசமான சொற்களை உபயோகிப்பது குற்றம் என்பதால் ஃபெடரருக்கு, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே இன்று நடைபெறவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர், உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: 'இது ஃபெடரர் சார்.. உரசாதீங்க...' - அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர்!