2020ஆம் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான டொமினிக் தீமை எதிர்கொள்கிறார்.

இந்த இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பானது ஜோகோவிச் பக்கமே உள்ளதாக ரசிகர்கள் கருகின்றனர். ஏனெனில் இதுவரை ஜோகோவிச் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் தோல்வியடைந்தது இல்லை.

அதே சமயம் தீம், கடந்த சில மாதங்களாகவே தனது உச்சகட்ட ஃபார்மில் உள்ளதால் அவரையும் சாதாரணமாக எடைபோட முடியாது. ஏனெனில் இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் உலகின் ஐந்தாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை 3-6, 6-4, 7-6, 7-6 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் ஜோகோவிச் இதுநாள்வரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்ற அனுபவ வீரராகவுள்ளதால் இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடக்கவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிப்போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரேனாவில் தொடங்குகிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஓபன் : முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கெனின்!