ஆண்டுதோறும் இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான அர்ஜூனா விருதை வழங்கி கெளரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான அர்ஜூனா விருதிற்கு பல்வேறு விளையாட்டுத் துறையிலிருந்து வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர்கள் அங்கிதா ரெய்னா மற்றும் திவிஜ் சரண் ஆகியோரைப் பரிந்துரை செய்யவுள்ளதாக, இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் டென்னிஸ் பயிற்சியாளர் நந்தன் பால், தயான் சந்த் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஆண்டு அர்ஜூனா விருதுக்கு இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் அங்கிதா ரெய்னா மற்றும் திவிஜ் சரண் பரிந்துரைக்கப்படுகிறார்கள். மேலும் தயான் சந்த் விருதிற்கு இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் பயிற்சியாளர் நந்தன் பால் பரிந்துரை செய்யப்படுகிறார்' எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நட்சத்திர வீரர்களாக வலம் வரும் அங்கிதா ரெய்னா, திவிஜ் சரண் ஆகியோர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மனைவியுடன் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடிய கோலி!