ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், அடுத்த மாதம் துவங்குகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இந்த டென்னிஸ் தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி துவங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்க பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மெயின் டிராவில் நுழையும் வாய்ப்பு சுமார் 2 ஆண்டுக்குப் பின் ஆண்டி முர்ரேவுக்கு கிடைத்தது. ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஐந்து முறை இரண்டாவது இடம் பிடித்துள்ள முர்ரே, நீண்ட இடைவேளை பின் இதில் பங்கேற்க இருந்தார். இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இவர் தனக்கு வழங்கப்பட்ட வைல்டு கார்டை பயன்படுத்தப்போவது இல்லை என்பதை உறுதி செய்து, நடப்பாண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை ஆஸ்திரேலியன் ஓபன் அமைப்பும் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க:தாய்லாந்து ஓபன்: காலிறுதியோடு வெளியேறிய சிந்து, சமீர்!