டென்னிஸில் ஆடவர் பிரிவில் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், நோவாக் ஜோகோவிச் ஆகியோருக்கு அடுத்தப்படியாக சிறந்த வீரராக திகழ்ந்தவர். கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே. இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவர், காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார்.
தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இந்த ஆண்டு ஜனவரியில் தான் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டென்னிஸ் ரசிகர்கள் பலரையும் இந்த முடிவு சோகத்தில் ஆழ்த்தியது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் விளையாட ஆரம்பித்தாலும், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்தார். தற்போது பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் ஆடவர்களுக்கான ஐரோப்பியா தொடர் ஏடிபி சார்பில் நடத்தப்பட்டுவருகிறது.
இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஆண்டி முர்ரே தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கம்பேக் தந்தார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர், பிரான்ஸைச் சேர்ந்த யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முர்ரே 3-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம், அவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அவர் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.