துபாய்: டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நேற்று (அக். 28) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை நிதானம்
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷால் பெரேரா, அசலங்கா ஆகியோர் தலா 35 ரன்களைச் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், கம்மின்னிஸ், ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அசால்ட் தொடக்கம்
157 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் - ஃபின்ச் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 60 ரன்களை சேர்த்தது. இதையடுத்து ஃபின்ச் 37, ரன்களிலும், மேக்ஸ்வெல் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் அரைசதம் கடந்த டேவிட் வார்னர் ஷனகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஸ்டாயானிஸ், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 65 ரன்களை எடுத்திருந்தார். இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆட்டநாயகன் ஸாம்பா
ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 12 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல் பிரிவில் புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் இலங்கை நான்காவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: ஸ்காட்லாந்தை வீழ்த்தி நமிபியா அசத்தல் வெற்றி