சென்னை: உலகக் செஸ் கோப்பை தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். கிளாசிக்கல் ஆட்டமான இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா. இறுதி போட்டி என்பதால் இருவருமே கவனமாக விளையாடி வந்த நிலையில் 35-வது காய் நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிக்கப்பட்டது. முதல் சுற்றில் இருவரும் சமன் செய்ததால், இறுதிப் போட்டியின் 2-வது ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெறுகிறது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுகிறார் பிரக்ஞானந்தா.
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக செஸ் நிறுவனமாகும். இதன் சார்பில், இந்தாண்டு, 10-ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி வருகிற 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 206 வீரர்கள் கலந்துக் கொண்டனர். ஒற்றை முறை எலிமினேஷன் முறையில் ஆட்டங்கள் நடைபெற்று தற்போது, இறுதி போட்டியின் இரண்டாவது சுற்று இன்று(ஆகஸ்ட்-23) நடைபெறுகிறது.
இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர், ஆர்.பிரக்ஞானந்தா, கடந்த ஆகஸ்ட் 21 நடைபெற்ற அரையிறுதியின் டைபிரேக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதற்கு முன் பல சர்வதேசப் போட்டிகளிலும் சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி... கார்ல்செனுக்கு நெருக்கடி கொடுக்கும் பிரக்ஞானந்தா... 2வது சுற்றில் மோதல்!
2002-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு 21-ஆண்டுகள் கழித்து, உலக செஸ் போட்டியில் இறுதிசுற்றை எட்டிய இந்தியர் என்ற தனிச் சிறப்பை பெற்றுள்ள பிரக்ஞானந்தா சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்.
இதனால் தாயார் நாகலட்சுமி தான் அவரை போட்டி நடக்கும் இடங்ளுக்கு எல்லாம் அழைத்து செல்வார். தற்போது கூட மகனின் வெற்றியை தூரம் நின்று ரசிக்கிற நாகலட்சுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், இவரின் சகோதரி வைஷாலியும், செஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் உலக சேம்பியனான கேரி காஸ்பரோவ் தனது சமூக வலைதளத்தில், பிரக்ஞானந்தாவையும், அவரின் தாயையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இந்த தொடரின் அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில், நேற்று (ஆகஸ்ட் 22) விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் கார்ல்சன்- பிரக்யானந்தா மோதிய உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. இதனால் இரண்டாம் சுற்று நடைபெற இருக்கிறது. இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தால், டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
இறுதி போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி பிரக்யானந்தா, இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். ஏற்கனவே பிரக்ஞானந்தா, உலக நம்பர் 2 வீரர் ஃபேபியானோ மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஹிகாருவை வென்றுள்ள நிலையில், உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தாவால் வெல்ல முடியுமா என்பது தான் சதுரங்க வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Ind Vs Ire 3rd T20 : இறுதி ஆட்டத்திலும் வெல்லும் முனைப்புடன் இந்தியா! அயர்லாந்து தாக்குபிடிக்குமா?
இது குறித்து பிரக்ஞானந்தாவின் பயிற்ச்சியாளர் ஆர்.பி.ரமேஷை தொலைப்பேசி வாயிலாக, தொடர்புக் கொண்டு பேசுகையில், "முதலில் பிரக்ஞானந்தாவை பற்றி தொடர்ந்து மக்களிடையே தெரிய வைத்த அனைத்து தமிழக மற்றும் இந்திய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் தற்போது முதல் மூன்று இடங்களில், (செஸ் தரவரிசை) குகேஷ், அவரை தொடர்ந்து, விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா" என்று முதல் முன்று இடத்தில் இருக்கிறார்கள்.
தற்போது செஸ் போட்டியில் 54-வயதான விஸ்வநாதன் தவிர்த்து, தற்போது தலைமுறை மாற்றம் நடைபெறுகிறது. குகேஷ், பிரக்ஞானந்தா என இளைஞர்கள் செஸ் விளையாட்டில் முன்னோடியாக இருக்கிறார்கள். செஸ் போட்டியை பொருத்தவரை திறமை இருந்தால் வெற்றி பெறலாம், தற்போது, இந்தியாவில், முதல் மூன்று இடத்தில் தமிழர்களாய் இருப்பது, பெருமிதமாக நான் கருதுகிறேன். தற்போது, 21-ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு இந்தியர் அரை இறுதி சென்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்று உள்ளார்.
மேலும், தற்போது, பிரக்ஞானந்தா இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் போட்டியில், பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்த கேண்டிடேட்ஸ் போட்டி என்பது, எட்டு போட்டியாளர்களை கொண்டு நடத்தப்படும் போட்டியாகும். இதில், செஸ் உலக கோப்பையில் வெற்றி பெற்றவர்கள், மற்றும் தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பாண்டு சாம்பியன் உடன் சேலஞ்சர் ஒருவர் நேருக்கு நேர் விளையாடுவார். நடப்பாண்டு சாம்பியனான சீனா வீரர் டிங் லிரெனுடன் மோதும் வாய்பை பெறுவார் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக செஸ் நட்சத்திரமான விஸ்வநாதன் ஆனந்தக்குப் பிறகு, உலக கோப்பை தொடரில் இறுதிச் சுற்று வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். உலகின் தரவரிசையில் முதல் நிலை (1-ஆவது ரேங்க்) சதுரங்க ஆட்டக்காரராக கார்ல்சன் திகழ்கிறார். அவர் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதனால் அவரை எதிர்கொள்ளும் பிரக்ஞானந்தாவின் செயல்பாடு இதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது வருகிறாது. மேலும், கார்ல்சனின் திட்ட வகுப்பு எப்படி என்று இன்றைய ஆட்டத்தில் தான் தெரியும்" இவ்வாறு அவர் கூறினார்.
இரு சாதனைகளை நோக்கி இந்தியா: ஜூலை 14ஆம் தேதி மதியம் 2:35 மணிக்குத் தொடங்கிய சந்திரயான்-3 இன் சாதனைப் பயணம் 40 நாட்கள் நெடும் தூர பயணத்திற்குப் பிறகு நிலாவில் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6:04 மணிக்குத் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெற்றிக்காக இந்தியா மட்டும் இன்றி உலக பார்வையே தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
அதேப்போல், செஸ் உலக கோப்பையின் இறுதி போட்டியில், வெற்றியை நோக்கி பயணிக்கும் 18 வயதுடைய பிரக்ஞானந்தாவின் மீது உலக பார்வை பக்கம் திரும்பி உள்ளது. வானியியல் ஆராய்ச்சியிலும், செஸ் விளையாட்டிலும் என இரு சாதனைகளை படைக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இதில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும், என்றும் இந்தியா மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.
இதையும் படிங்க: சந்திரயான் -3: நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ரோவரின் பணி என்ன?