டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றவர். 2013ஆம் ஆண்டு மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியுற்ற அவர், பின்னர் 2014ஆம் ஆண்டு அவரை வெற்றி கொண்டார்.
இவர் 1991-92ஆம் ஆண்டில் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றவர். 2007ஆம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருது, பத்ம விபூஷண் விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது 51 வயதான செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், வளர்ந்து வரும் செஸ் நட்சத்திரங்களுக்காக ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் அவர் நாட்டின் இளம் சதுரங்க நட்சத்திரங்களின் முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், "வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாதெமி (WACA) தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் திறமைகளை வளர்ப்பதற்கான என்னுடைய நீண்ட கனவை நனவாக்கும் முயற்சியில், வெஸ்ட்பிரிட்ஜ் நிறுவனத்துடன் இணைந்துப் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
மேலும் குறிப்பிட்ட இவர், "ஒரு நபராகவும், சதுரங்க வீரராகவும் நான் அவர்களின் முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவேன். இது ஒரு பெல்லோஷிப் திட்டமாக இருக்கும். இது மிகவும் திறமையான ஜூனியர் சதுரங்க வீரர்களை முதலிடத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!