சென்னை: வடசென்னை பகுதிக்குள்பட்ட வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மகன் கார்த்திக். பாக்சிங்கில் ஆர்வமுள்ள கார்த்திக் தன்னுடைய 12 வயதிலிருந்து பாக்சிங் பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் வியாசர்பாடியில் இயங்கிவந்த கிங்மேக்கர் பாக்சிங் அகாதமியில் பயிற்சி பெற்றுவந்த அவர், வடசென்னையைச் சேர்ந்த லோகசந்திரன், சயீத் நஜிப் ஆகியோரின் ஆலோசனைப்படி தொழில் முறை குத்துச் சண்டையில் தற்போது ஈடுபட்டுவருகிறார்.
தொழில் முறை குத்துச்சண்டையாளர்
பாக்சிங்கில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கார்த்திக்கிற்கு 2019ஆம் ஆண்டிலிருந்து பெங்களூருவில் பயிற்சிக்கு வாய்ப்பு கிடைத்து.
அங்குச் சென்று கடந்த இரண்டாண்டுகளாகப் பயிற்சிகளை மேற்கொண்டுவந்தார். 2019 லிருந்து தற்போதுவரை இந்தத் தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் பங்குபெற்றுவருகிறார்.
இதுவரை நடந்த எட்டு போட்டிகளில் இவர் முழுமையாக வெற்றிபெற்றுள்ளார். மூன்று போட்டிகளில் நாக்-அவுட் முறையில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்திய தரவரிசையில் முதலிடம்
இந்நிலையில், உலக பாக்சிங் கவுன்சிலிங் சார்பில் நடத்தப்பட்ட ஆசியா வெள்ளிப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு போட்டியிலும் பங்கேற்றார். வெளிநாட்டில் நடக்கவிருந்த போட்டிகள் கரோனா பரவல் காரணமாக ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன.
முன்னாள் சாம்பியனான இந்தோனேசிய வீரர் ஹீரோடிட்டோ உடன் நடந்த போட்டியில் கார்த்திக், ஹீரோடிட்டோவை வீழ்த்தி இந்தியாவில் முதல்முறையாக ஆசியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த ஆசியா வெள்ளியை வென்றதன் மூலம் லைட் வெயிட் வகை உலக தரவரிசைப் பட்டியலில் 196ஆவது இடத்திற்கும், இந்திய தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
மேலும் இது குறித்து ஆசியா வெள்ளிப் பதக்கத்தை வென்ற கார்த்திக் கூறியிருப்பதாவது, "நான் வென்ற இந்த பதக்கம் எனக்கானது என்பதைவிட நமக்கானது எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். பதக்கம் வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். குறிப்பாக, பதக்கம் வென்ற நான் வடசென்னை பகுதியைச் சேர்ந்தவன்.
ஒலிம்பிக்கே கனவு
என்னைப் போல் பாக்சிங்கில் இருப்பவர்கள் பதக்கங்களை வெல்ல வேண்டும் எனக் கூறுகிறேன். நான் தற்போது பெங்களூருவில் வேலை பார்த்துக்கொண்டே பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன். 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள வேண்டும் என்ற இலக்குடன் படிப்படியாக எனது பயணத்தை மேற்கொண்டுவருகிறேன்" என்றார்.
பதக்கம் வென்று சென்னை வந்த கார்த்திக்கிற்கு அவர் ஆரம்ப காலத்தில் பயிற்சி மேற்கொள்ள உதவிய வியாசர்பாடி கிங்மேக்கர் பாக்சிங் அகாதமி சார்பில் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.