ஒரே நாளில் கம்பாளா போட்டி மூலம் இந்தியாவின் உசைன் போல்ட் என பெயரெடுத்தவர் மங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டத் தொழிலாளி ஸ்ரீநிவாச கவுடா. தென் கன்னட மாவட்டத்தின் கிராமமான மூடபத்ரியில் நடந்த இப்போட்டியில் இவர், தனது எருமை மாடுகளுடன் போட்டி தூரமான 142.5 மீட்டர் தூரத்தை 13.42 விநாடிகளில் ஓடி சாதனை புரிந்தார்.
சர்வதேச தடகள போட்டியில் 100 மீட்டர் இலக்கை 9.58 விநாடிகளில் கடந்து உலகின் மின்னல் வேக வீரர் என பெயர் பெற்றவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். ஆனால், ஸ்ரீநிவாச கவுடா 100 மீட்டர் தூரத்தை கடக்க 9.55 விநாடிகள் மட்டுமே எடுத்து கொண்டதால், இவர் இந்தியாவின் 'உசைன் போல்ட்' என அழைக்கப்பட்டார்.
ஸ்ரீநிவாச கவுடாவின் இந்த மின்னல் வேக ஓட்டத்திறன் சமூக வலைதளங்களில் வைரலாகி, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இவருக்கு ஓட்டப்பந்தய சோதனை நடத்த வாய்ப்பு வழங்கியது வேறு கதை. தற்போது உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி, ஸ்ரீநிவாச கவுடாவை மிஞ்சும் வகையில் வேகமாக ஓடி புதிய சாதனை படைத்துள்ளார்.
கம்பாளா போட்டியில் நிஷாந்த் ஷெட்டி 143 மீட்டரை 13.61 விநாடிகளில் கடந்துள்ளார். இதில், 100 மீட்டர் இலக்கை கடந்தது கணக்கிட்டால், இவர் ஸ்ரீநிவாச கவுடாவின் சாதனையை முறியடித்தது தெரியவந்தது. ஸ்ரீநிவாச கவுடா 100 மீட்டரை 9.55 விநாடிகள் கடந்த நிலையில், நிஷாந்த் ஷெட்டி 9.51 விநாடிகள் கடந்து அசத்தியுள்ளார்.
தற்போது ஸ்ரீநிவாச கவுடாவின் சாதனையை நிஷாந்த் ஷெட்டியின் ஓட்டத்திறன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இவரது வீடியோவை பார்த்த பலரும் இந்தியாவில் இத்தனை உசைன் போல்ட்டா என்ற வியப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத்திற்கு இந்தியாவின் உசைன் போல்ட் பிரத்யேக பேட்டி!