இந்திய அரசால் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினை, இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ராவிற்கு வழங்க, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
25 வயதாகும் மணிக்கா பத்ரா, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் இந்தியாவிற்காக டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையும் படைத்தார்.
அதேபோல் ஆசிய விளையாட்டு போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலம் வென்று அசத்தினார். இதன் காரணமாக கடந்த ஆண்டும் இவ்விருதுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ரம்பால் ஆகியோரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுயுள்ளது.