உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்திவருகின்றன. இதன் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடர் நேற்று ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸால் பார்வையாளர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஒலிம்பிக் தொடர் ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஆக்ஸ்ட் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவில்லை என்றால் ரசிகர்களின்றி போட்டியாளர்கள் மட்டும் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியை தான் நடத்தமுடியும்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதில், '' ஒலிம்பிக் போட்டிகளை ரசிகர்களின்றி நடத்துவதற்கு பதிலாக ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கலாம்'' என அறிவுறித்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு கூறுகையில், ''ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும். ஜப்பான் அரசுடனும், டோக்கியோ மாநகராட்சியுடனும் இணைந்து பாதுகாப்பாக ஒலிம்பிக் தொடரை நடத்துவோம்'' எனத் தெரிவித்துள்ளது.
இதனால் மக்களிடையே ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது!