மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபிநவ் பிந்த்ரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களைப் பற்றி பேசினார். அதில், ''இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அனைவருக்கும் இந்திய அணிதான் ஃபேவரைட். ஏனென்றால் இந்தியாவிலிருந்து 15 துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த 15 வீரர்கள் கிட்டதட்ட 21 போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இதில் 50 விழுக்காடு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலே இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் அதிக எண்ணிக்கையில் வரும்.
விளையாட்டுகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதற்கு அதிக நேரங்களையும், உழைப்பையும் கொடுக்கவேண்டும். இந்திய துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் ஜூனியர் போட்டிகளுக்கும், வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்ல அறிகுறியாக தெரிகிறது'' என்றார்.
2018ஆம் ஆண்டு செப்.1ஆம் தேதி முதல் தொடங்கிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகளில் இந்திய வீரர்கள் பலரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சுடுதலைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் மனு பேக்கர், செளரப் சவுத்ரி ஆகியோர் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துப்பாக்கிச் சுடுதலில் 2வது தங்கம் வென்றார் மனு பேக்கர்!