உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளால் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, பல விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தாண்டு டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படும் எனத் தகவல் வெளியானது.
இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர் யோஷிரோ மோரி பேசுகையில், ''இதுவரை ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைப்பதற்குச் சிறிதளவுகூட யாரும் யோசிக்கவில்லை'' என்றார்.
அதேபோல் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செய்தித்தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் பேசுகையில், ''கொரோனா வைரஸ் பற்றிய பயம் எல்லாம் இல்லை. நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளைச் சொன்ன தேதியில் மாற்று இடத்தில் நடத்த முடியுமா என்பதை மட்டுமே சிந்தித்துவருகிறோம்'' என்றார்.
மேலும் ஒலிம்பிக் போட்டிகள் சில மாதங்கள் தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதையும் படிங்க: 'கொரோனோவால் உலகக்கோப்பையில் புள்ளிகள் இல்லை' - அதிரடி அறிவிப்பு