சமீப காலமாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கி பல விளையாட்டு வீரர்கள் தங்களுக்கான தண்டனைகளை அனுபவித்துவருகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்ய நாட்டிற்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்கமருந்து தடுப்பாணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இதனையடுத்து பல உலக நாடுகள் தங்களது வீரர்களின் பரிசோதனை மாதிரிகளை உடனடியாக அனுப்புமாறும் தடுப்பாணையம் உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில் தற்போது சீனாவின் நட்சத்திர நீச்சல் வீரரான சன் யங், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உபயோகித்திருப்பது உறுதியாகியுள்ளதால், அவருக்கு எட்டு ஆண்டுகள் தடைவிதித்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம்(சிஏஎஸ்) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இதுகுறித்து சிஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக ஊக்கமருந்து தடுப்பாணையம் முறையிட்ட வழக்கில், சீன நீச்சல் வீரர் சன் யங் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உபயோகித்திருப்பது உறுதியாகியுள்ளதால், அவருக்கு எட்டு ஆண்டுகள் தடைவிதித்து சிஏஎஸ் உத்திரவிடுகிறது என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தத் தடை காரணமாக சீனாவின் சன் யங் வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இயலாது எனவும் சிஏஎஸ் தெரிவித்துள்ளது.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள சன் யங், 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் இரண்டு தங்கமும், 2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஒரு தங்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தோனியின் ரசிகனாக கபில்தேவ் கருத்து - உற்சாகத்தில் ரசிகர்கள்!