மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான WWE ரெஸ்ட்லிங்க்(Wrestling) நிகழ்ச்சி குறித்துத் தெரியாத இந்திய ரசிகர்களே இருக்கமாட்டார்கள். சிறுவயதில் டி.வி முன்பு அமர்ந்து இதைப் பார்க்கத் தொடங்கிய பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்கள் இன்றளவும் யூடியூப் வாயிலாக WWEஐ கண்டுகளிக்கின்றனர்.
இதில், கடந்த வார வெள்ளிக்கிழமை ஸ்மேக்டவுனில்(Smackdown) நடைபெற்ற நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சூப்பர் ஸ்டாரான ’தி ராக்’ என்றழைக்கப்படும் டுவைன் ஜான்சன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ரெஸ்ட்லராக இருந்து நடிப்புத் துறைக்கு சென்ற அவர், தற்போது ஹாலிவுட்டில் முக்கிய நடிகரில் ஒருவராக மாறியுள்ளார்.
இதனால், WWEஇல் பெரும்பாலும் பங்கேற்காமல் ஆண்டுக்கு ஒருமுறை பிரமாண்டமாக நடைபெறும் ரெஸ்டில்மேனியா(wrestle mania) நிகழ்ச்சியில் மட்டும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுவருகிறார். இந்நிலையில், இவருடன் அடுத்தாண்டு நடைபெறும் ரெஸ்டில்மேனியா XXVI நிகழ்ச்சியில் மோதவேண்டும் என மற்றொரு பிரபல வீரர் ரான்டி ஆர்டன்(Randy Orton) விருப்பம் தெரிவித்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஜான் சீனா(Jhon Cena) உங்களை நான் மிகவும் மிஸ்(Miss) செய்கிறேன். அடுத்த ரெஸ்டில்மேனியா XXVIஇல் ராக்கின் பிளான் என்னவென்று எனது நண்பராக கேட்கிறீர்களா” எனப் பதிவிட்டிருந்தார். 16 முறை WWE சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஜான் சீனா, ராக் பாணியில் தற்போது ரெஸ்ட்லிங்கை விட்டு விலகி பல ஹாலிவுட் படங்களில் நடித்துவருகிறார்.

ரான்டி ஆர்டனின் இப்பதிவுக்கு பதிலளித்த ராக், ”ரெஸ்டில்மேனியா XX நிகழ்ச்சில் நீங்கள் எவாலியூஷன்(Evolution) அணியாக என்னை வீழ்த்தியதிலிருந்து, எனது உடல் தற்போதுதான் மீண்டு வந்து கொண்டிருக்கிறது” என்றார். ராக்கின் இந்தப் பதிலைக் கண்டு மிகவும் வருத்தமடைந்த ஆர்டன், எனது சவாலை நீங்கள் ஏற்க மாட்டீர்கள் போலத் தெரிகிறது எனப் பதிவிட்டிருந்தார்.
'தி ராக்' இதுவரை 17 முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். அதேசமயம், ரான்டி ஆர்டன் 13 முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.