பொள்ளாச்சி அரிமா சங்கம், தமிழ்நாடு பிரெய்லி அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 18 மாவட்டங்களைச் சேர்ந்த 81 மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இப்போட்டியில் 18 சர்வதேச வீரர்களும் கலந்துகொண்டனர். ஏழு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு ஏற்றவகையில் சதுரங்கப் பலகை அமைக்கப்பட்டு கறுப்பு, வெள்ளை காய்களை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
அவற்றை தொட்டு உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி சாதுர்யமாக வீரர்கள் விளையாடி அசத்தினர். இறுதியாக வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரொக்கப் பணமும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
அதன்பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில், இதுபோன்ற விளையாட்டுகள் சென்னையில் அரசு சார்பில் நடத்த வேண்டும், இந்திய அளவில் விளையாட்டு வீரர்கள் அசத்திவந்த போதிலும் தேசிய அளவில் விளையாடுவதற்கான வாய்ப்பைப்பெற முடியவில்லை. எனவே அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.