இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், முன்னாள் வீரர்களின் வருமான ஆதாரத்தை உருவாக்கும் நோக்கில் இந்திய விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் மாவட்ட அளவிலான ஆயிரம் கெலோ இந்தியா மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஹாக்கி, ஜூடோ, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட 14 வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கு கெலோ இந்தியா மையங்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும். இதில், கால்பந்து உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சி மையங்களை அடையாளம் காணும் செயல்முறையாக, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் விளையாட்டுத் துறையால் மாவட்ட விளையாட்டு அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு மேற்கொள்ளப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட மையங்களுக்கான இடங்களை மதிப்பீடு செய்ய, அதன் ஆவணங்களை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் பிராந்திய மையத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், இந்த ஆண்டு 100 கெலோ இந்தியா மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், "நாடு முழுவதும் மாவட்ட அளவிலான கெலோ இந்தியா மையங்களை நிறுவுவதன் மூலம், தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களின் வருமான ஆதாரத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.