தோஹா: ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
14ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற 17 வயது இளம் இந்திய நட்சத்திர வீரர் சவுரப் சவுத்ரி 224.5 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடம்பிடித்ததால், இவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அதேசமயம் இப்போட்டியில், வட கொரியாவைச் சேர்ந்த கிங் சாங் குக் 246.5 புள்ளிகளுடன் உலகச் சாதனைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஈரானைச் சேர்ந்த ஜவாத் 221.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஒலிம்பிக்கில் என்ட்ரி தந்த இந்தியர்கள்
முன்னதாக, நேற்று நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஆடவர் ஸ்கீட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் அங்கத் வீர் சிங் பாஜ்வா, வெள்ளி வென்ற மற்றொரு இந்தியரான மைராஜ் அகமது கான் ஆகியோரும் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதிபெற்ற 15 இந்திய வீரர்கள்
இதன்மூலம் இந்தியா சார்பில் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்களில் பங்குபெற்றவர்கள் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 11 பேரும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் 12 பேரும் கலந்துகொண்டதே அதிகமாக இருந்தது.