ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இதன் ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் பிரிவுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றுவருகின்றன. இதில், பஜ்ரங் பூனியா (65 கிலோ), ரவிக்குமார் ( 57 கிலோ), கவ்ரவ் பளியான் (79 கிலோ), சத்யவர்த் கடியான் (97 கிலோ), நவீன் (70 கிலோ) ஆகிய ஐந்து இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அதில், நவீனை தவிர்த்த மற்ற நான்கு பேரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, 97 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச் சுற்றில் இந்திய வீரர் சத்யவர்த் கடியான், ஈரானைச் சேர்ந்த மொஜ்டபா கொலெ (Mojtaba GOLEIJ) உடன் மோதினார். இதில், சத்யவர்த் கடியான் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றார்.
இதையடுத்து, நடைபெற்ற 79 கிலோ பிரிவுக்கான இறுதிப்போட்டியில் கவ்ரவ் பளியான் 5-7 என்ற கணக்கில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த அர்சலன் புடாஷாபோவிடம் (Arsalan Budazhapov) போராடி தோல்வியடைந்தார். இதனால், இவருக்கு வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது.
இதன்பின்னர், 65 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இதில், உலக சாம்பியன் ஜப்பானின் டகுடோ ஒடாகுரோவுடன் (Takuto Otoguro) இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
2018இல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா டகுடோவிடம் தோல்வியடைந்து தங்கப்பதக்கத்தைப் பறிகொடுத்தார். இதனால், இன்றைய ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா அதற்கு பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிரடி ஆல்ரவுண்டருக்கு பாகிஸ்தான் குடியுரிமை; உற்சாகத்தில் பாக். ரசிகர்கள்