கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியும் உள்ளது.
மேலும் நாளுக்கு நாள் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மேலும், தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில், பெருநிறுவனங்கள் தங்களது 50 விழுக்காடு ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும், விளையாட்டு வீரர்கள் கட்டுப்பாடுகளுடன் கூடிய பயிற்சிக்குத் திரும்பலாம் என்றும் மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த சில திங்களுக்கு முன்பு அரசின் அறிவுறுத்தலின்படி, செயல்பட்டுவந்த இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை கட்டடத்தில் பணியாற்றிவந்த அலுவலர் ஒருவருக்கு, கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பிற ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமையகம் முழுவதும் நேற்று கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம்செய்யப்பட்டது.
இது குறித்து சாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
வில்வித்தை, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற உள்ளரங்கு விளையாட்டு வீரர்களும் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளதால், இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமையகம் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம்செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அங்கு வரும் வீரர்களும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘எனக்கு எதிராகப் பேச யுவராஜ், ஹர்பஜன் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள்’ - அப்ரிடி