ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டிலுள்ள அல்மாதி நகரில் நடைபெற்றவருகிறது. பல்வேறு எடைப் பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலருக்குமான போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
இதில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய நட்சத்திர மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, கொரிய வீரர் யோங்சியோக் ஜியோங்ஙுவுக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் வென்றார்.
இந்தப் போட்டியின்போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியுடன் போராடி வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றார். இருப்பினும் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து புனியா கூறுகையில், "கொரியா வீரர் ஜியோங்ஙை இழுத்தபோது வலது முழங்கையில் வலி தீவிரமானது. இதே பகுதியில்தான் உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது காயம் அடைந்தேன்.
ஒலிம்பிக் போட்டி விரைவில் தொடங்க இருப்பதால் ஓய்வில் இருக்குமாறு எனது பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். நானும் இந்தக் காயத்தை மேலும் மோசமாக்க விரும்பவில்லை. எனவே இறுதிப் போட்டியிலிருந்து விலகினேன்" என்றார்.
அதேபோல் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவி குமார் தஹியா, 9-2 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானின் அலிரசா நோஸ்ராடோலா ஷர்லாக்கை வீழ்த்தி மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் முழுக்க ஆதிக்கம் செலுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரவி.
இதையும் படிங்க: 12 வாரங்களுக்கு நோ கிரிக்கெட்: முழு ஓய்வில் பென் ஸ்டோக்ஸ்