தலைநகர் டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் பிரிவுக்கான போட்டிகளில் இந்திய வீரர்களான, பஜ்ரங் பூனியா (65 கிலோ), ரவிக்குமார் ( 57 கிலோ), கவ்ரவ் பளியான் (79 கிலோ), சத்யவர்த் கடியான் (97 கிலோ) ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.
அதில், கவ்ரவ் பளியான் (79 கிலோ), சத்யவர்த் கடியான் (97 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து, 57 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவி குமார், தஜிகிஸ்தானின் ஹிக்மடுல்லோ வோஹிடோவுடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவி குமார், 10-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
இதையடுத்து, 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா, ஜப்பானின் டகுடோ ஒடாகுரோவுடன் (Takuto Otoguro) பலப்பரீட்சை நடத்தினார்.
2018இல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பஜ்ரங் பூனியா, டகுடோவிடம் பறிகொடுத்த தங்கப் பதக்கத்தை இம்முறை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பஜ்ரங் பூனியா 2-10 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே பெற்றார்.
இதன்மூலம், இந்தியா இந்த தொடரில் ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: உங்க பிரச்னையை நீங்க பாத்துக்கோங்க - ஐசிசி பல்டி!