உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தானில் நடைபெற்று வருகிறது. இதில், 61 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே பங்கேற்றார். இவர் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இதையடுத்து, இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டியில் அவர் முன்னாள் ஆசிய சாம்பியன் கஜகஸ்தானின் ரசூல் கலியேவுடன் (Rassul Kaliyev) மோதினார். இதில், சிறப்பாக செயல்பட்ட ராகுல் 10 - 7 என்றக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர் ஜார்ஜியாவைச் சேர்ந்த பெகோவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், 6-10 என்ற கணக்கில் ராகுல் அவாரே போராடி தோல்வி அடைந்தார். இதனால், நாளை நடைபெறவுள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் போட்டியிடவுள்ளார். முன்னதாக, இந்திய வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, ரவிகுமார் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர். தற்போது இவர்களது வரிசையில் ராகுல் அவாரே இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேசமயம், இந்தத் தொடரின் 86 கிலோ பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா நாளை தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் ஈரான் வீரர் ஹசான் யாஸ்டனிசராட்டியுடன் பலப்பரீட்சை (Hassan Yazdanicharati) நடத்தவுள்ளார்.
இதையும் படிங்க: #WorldWrestlingChampionship: தங்கப் பதக்கத்தை நெருங்கும் இந்திய வீரர்!