ப்ரோ கபடி லீக்கின் ஏழாவது சீசன் ஜூலை மாதம் தொடங்கி பல்வேறு இடங்களில் நடந்துவருகிறது. தற்போது தமிழ் தலைவாஸின் சொந்த மைதானமான சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நேற்றைய லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை எதிர்கொண்டது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் ஜெய்பூர் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநீவாஸ் ரெட்டி, "தமிழ் தலைவாஸ் அணியில் உள்ள வீரர்களுக்கு வயசாகிவிட்டது, விரைவில் ஓய்வு அடைய இருக்கும் வீரர்களைக் கொண்ட அணி அது" என்று தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்திருந்தார். இதன் காரணமாக நேற்றைய ஆட்டத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆட்டம் தொடங்கிய முதல் 13 நிமிடங்களுக்கு ஜெய்ப்பூர் அணி 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. தமிழ் தலைவாஸின் மிக முக்கிய டிஃபன்டரான மஞ்சீத் சில்லர் ஆட்டத்தில் இல்லாதது களத்தில் நேரடியாகவே எதிரொலித்தது. ஜெய்பூரின் நட்சத்திர ஆட்டக்காரர் நிகிலேஷ் சலுங்கே ஆறு புள்ளிகள் மட்டும் போனஸாக எடுத்திருந்ததே இதற்குச் சாட்சி.
பின்னர் அதிரடி காட்டிய அஜய் தாகூரின் ஆட்டத்தால் ஜெய்பூர் அணியில் ஒரு கட்டத்தில் இரண்டு வீரர்கள் மட்டும் களத்திலிருந்தனர். ஆனாலும் ஜெய்பூர் அணியினர் சாமர்த்தியமாக ஆடியதால் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரை ஆல் அவுட் ஆவதை தவிர்த்து வந்தனர். முதல் பாதி முடிவில் 11-13 என்ற புள்ளிகள் கணக்கில் நூலிலையில் முன்னிலையைத் தக்கவைத்திருந்தது ஜெய்பூர்.
ஜெய்பூர் அணி பயிற்சியாளரின் கருத்துகளுக்கு நேற்றைய ஆட்டத்தில் களத்தில் எதிர்வினையாற்றினர் தமிழ் தலைவாஸ் வீரர்கள். இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் வேகம் பலமடங்கு அதிகரித்தது. எதிரணி வீரர்களை அடக்குவதில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் காட்டிய ஆக்ரோஷமே அதற்குச் சாட்சி.
பின் ஒரு வழியாக இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்தில் ஜெய்பூர் அணியை ஆல் அவுட் ஆக்கி 17 -17 என்று சமன் செய்தது தமிழ் தலைவாஸ் அணி. இதன் பின்னரான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மாற்றி மாற்றி புள்ளிகளைப் பெற்று வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெய்பூர் அணி மீண்டும் ஆல் அவுட் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், தமிழ் தலைவாஸ் அணி செய்த சிறு தவறுகளால் ஆல் அவுட் ஆவதிலிருந்து தப்பியது.
பொதுவாக நிதானமாக ஆடும் அஜய் தாக்கூர் அதீத ஆக்ரோஷத்துடன் ஆடியதால் 'க்ரீன் கார்ட்' எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதிலிருந்தே ஆட்டத்தில் நிலவிய பரபரப்பை ஒருவர் புரிந்துகொள்ளலாம். அனல் பறந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் 26 - 28 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றியைத் தவறவிட்டது. ஆட்டத்தில் நடுவர்களும் சில புள்ளிகள் தமிழ் தலைவாஸுக்கு எதிராகத் தவறாக வழங்கியிருந்தது தமிழ் தலைவாஸ் தோல்விக்கு வழிவகுத்தது.
ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்பூர் பயிற்சியாளர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, தனது பேச்சு தவறுதலாக அர்த்தம்கொள்ளப்பட்டதாகவும், தனது முழு பேட்டியைப் பார்த்தால்தான் என்ன கூற வந்தேன் என்பது புரியும் என்றும் அந்தர் பல்டி அடித்தார்.