புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசனின் இறுதிப் போட்டி இன்று அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில், தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளும் இறுதிச் சுற்றில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
ஆரம்பத்தில் மிரட்டிய தபாங் டெல்லி
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலிருந்தே தபாங் டெல்லி அணி ரைடிங், டிஃபெண்டிங் இரண்டிலும் மிரட்டியது. குறிப்பாக, அந்த அணியின் நட்சத்திர ரைடர் நவின் குமார் ரைடிங்கில் புள்ளிகளை அடுத்தடுத்து பெற்றுத்தந்தார்.
மறுமுனையில், ரைடிங், டிஃபெண்டிங் இரண்டிலும் சொதப்பிய பெங்கால் வாரியர்ஸ் அணி எட்டாவது நிமிடத்திலேயே ஆல் அவுட்டானது. இதனால், தபாங் டெல்லி அணி 11-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தை தன் பக்கம் மாற்றிய பெங்கால் வாரியர்ஸ்
எட்டாவது நிமிடத்திற்குப் பிறகு ஆட்டம் ஒட்டுமொத்தமாக தலைகீழானது. பெங்கால் அணியின் ஆட்டம் எழுச்சிகரமாக இருக்க, அதேசமயம், டெல்லியின் ஆட்டம் மந்தமானது.
குறிப்பாக, பெங்கால் அணியின் முகமது நபிபாக்ஷ் தனது சிறப்பான ரைடிங் மூலம், டெல்லி அணியின் இரண்டு வீரர்களையும் அவுட் செய்து அந்த அணியை ஆல் அவுட் செய்தார். இவரது ரைட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இதனால், 11-3 என்ற கணக்கில் இருந்த பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் பாதி முடிவில் 17-17 என்ற புள்ளிகளைப் பெற்று சமமான நிலையில் இருந்தது.
தொடர்ந்த பெங்கால் வாரியர்ஸின் ஆதிக்கம்
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் போட்டிபோட்டுக்கொண்டு புள்ளிகளைப் பெற்றுவந்தனர். இருந்தாலும், ஒருகட்டத்தில் பெங்கால் அணியின் ஆட்டத்துக்கு டெல்லி அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த அணி அடுத்தடுத்து இரண்டு முறை ஆல் அவுட்டானது. இதனால், பெங்கால் வாரியர்ஸ் அணியின் புள்ளிகள் 34ஐ எட்ட, டெல்லி அணியோ 24 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது.
நவின் குமாரின் போராட்டம் வீண்
ஆட்டத்தின் கடைசி தருணங்களில் வெற்றிபெற வேண்டும் என டெல்லி வீரர் நவின் குமார் போராடினாலும், டிஃபெண்டிங்கில் டெல்லி அணி தொடர்ந்து தவறுகளை மேற்கொண்டது.
பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன்
இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.
இப்போட்டியில், அதிகபட்சமாக டெல்லி வீரர் நவின் குமார் 18 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம், இந்த சீசனில் 300 புள்ளிகளையும் அவர் பெற்று அசத்தினார். இப்போட்டியில் பெங்கால் அணி சார்பில் முகமது நபிபாக்ஷ் 10, சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.