தடகளப் போட்டி என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்தான். தொட்டதெல்லாம் தங்கம் என்பதுபோல, அவர் பங்கேற்ற பல்வேறு பிரிவு ஓட்டப்பந்தய போட்டியில் தங்கத்தை வேட்டையாடினார் என்றே சொல்லலாம்.
![Allyson Felix](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4598740_usain.jpg)
- ஒலிம்பிக்கில் எட்டு தங்கம்,
- உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 11 தங்கம்
என பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அவரது சாதனையை அமெரிக்க வீராங்கனை அலிசன் ஃபெலிக்ஸ் (Allyson Felix) முறியடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், தோஹாவில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 4 X 400 கலப்பு அமெரிக்க அணிப் பிரிவில் இடம்பெற்றிருந்தார்.
![Allyson Felix](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4598740_mi.jpg)
உலக சாதனை
இவரது அணி பந்தய இலக்கை, மூன்று நிமிடம் ஒன்பது விநாடி 34 மணித்துளிகளில் (3:09:34) கடந்து புதிய உலக சாதனைப் படைத்தது மட்டுமின்றி, தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றது. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இவர் வெல்லும் 12ஆவது பதக்கம் இதுவாகும்.
தாய்மைக்குப் பின் கழுத்தில் ஏறிய முதல் தங்கம்
இதனால், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற உசைன் போல்ட்டின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
![Allyson Felix](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4598740_b.jpg)
தாய்மைக்குப் பிறகு இவரது கழுத்தில் ஏறும் முதல் தங்கம் இது என்பதால் இவருக்கு நிச்சயம் இச்சாதனை தனித்துவமானதுதான்.