கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் மட்டும் கால்பந்து போட்டிகள் பார்வையாளர்களின்றி நடந்து வருகிறது. இதனிடையே மே 17ஆம் தேதிக்கு பின் இந்தியாவில் விளையாட்டு மைதானங்களை திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் மைதானங்களுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்றது.
இந்நிலையில் இந்தியாவில் இன்னும் சில மாதங்களுக்கு சர்வதேச அளவிலான எவ்வித தொடர்கள் நடக்க வாய்ப்பில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னதாக வீரர்களின் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் சில மாதங்களுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் திட்டம் எதுவுமில்லை.
பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சூழலுக்கு பழக வேண்டும். விளையாட்டுப் போட்டிகளுக்காக மக்களின் சுகாதாரம் பாதிக்கக் கூடாது. அதனால் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது பற்றியும் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். ஐபிஎல் தொடர் பற்றிய முடிவும் மத்திய அரசுதான் எடுக்கும். சூழலைக் கணக்கில் கொண்டு மட்டுமே தொடர் நடத்த அனுமதி வழங்கப்படும்.
கரோனா வைரஸை எதிர்கொண்டு வருவதோடு, மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும். அதனால் விளையாட்டுப் போட்டிகள் இந்த தேதியில் தொடங்கும் என உறுதியாகக் கூற முடியாது.
விளையாட்டு வீரர்கள் ஃபிட்னெஸ், பயிற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
திறக்கப்பட்ட மைதானங்களில் பயிற்சிகள் மேற்கொள்ளும் வீரர்கள் நிச்சயம் அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடருக்கு இந்தியா சார்பாக அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும்.
இதுவரை நடந்த ஒலிம்பிக் தொடர்களிலேயே, இந்திய வீரர்கள் இந்த ஒலிம்பிக் தொடருக்குத்தான் பயிற்சிகளில் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். அடுத்த வருடம் நடக்கும் ஒலிம்பிக்கில் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை என்றாலும், 2028இல் நடக்கும் ஒலிம்பிக்கில் நிச்சயம் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் வரும்'' என்றார்.
இதையும் படிங்க: கங்குலி, ஜெய் ஷாவின் பதவியை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு!