அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட மேலை நாடுகளில் பிரபலமானது கலப்பு தற்காப்புக் கலை. இதற்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தக் கலை தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாநில அளவிலான போட்டி சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கேரளா, மேகாலயா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 வீரர்கள் கலந்துகொண்டனர். வீரர்களுக்கு மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் கலப்பு தற்காப்புக் கலை வீரர் பாரத் கந்தாரி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதும், அதிலிருந்து வீரர்கள் தற்காத்துக் கொண்டதும் பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது. போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஓய்வுபெற்ற தமிழ்நாடு காவல் துறை உயர் அலுவலர் ஜாங்கிட் கோப்பை, சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து இந்திய வீரர் பாரத் கந்தாரி கூறுகையில், உலகப் புகழ்பெற்ற இந்தக் கலையை தமிழ்நாட்டில் கொண்டுசேர்க்க முயற்சி மேற்கொண்டுவருவதாகவும் இந்தக் கலையை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கற்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.
தற்போது நடைபெற்ற போட்டியைத் தொடர்ந்து இந்திய அளவிலான போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகப் போட்டி நடத்திய குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின்!