மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே 17ஆவது மும்பை மாரத்தான் போட்டிகள் நேற்று நடைபெற்றன. மொத்தம் 5.9 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் தடகள வீரர்கள், திரை நட்சத்திரங்கள், பொதுமக்கள், குழந்தைகள் என 55,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இதனை மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் பால்கார் மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திர மஞ்சால்கர் என்ற 64 வயது முதியவரும் கலந்துகொண்டு ஓடினார். அப்போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கஜேந்திராவை பாம்பே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்த மாரத்தான் போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்ட மற்ற ஏழு பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதில் இந்தியன் எலைட் புல் மாரத்தான் ஆடவர் பிரிவில் ஸ்ரீனு புகாத்தாவும், மகளிர் பிரிவில் சுதா சிங்கும் முதலிடம் பிடித்தனர்.