சண்டிகர்: நாட்டின் முதுபெரும் தடகள வீரர் மில்கா சிங்குக்கு கோவிட் பெருந்தொற்று பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் கடந்த 3ஆம் தேதி பஞ்சாப் சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் (முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- Post Graduate Institute of Medical Education and Research (PGIMER) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரின் பிராண வாயு கடுமையாக குறைந்தது.
இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் அசோக் குமார், “கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மில்கா சிங் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மில்கா சிங் முன்னதாக மொகாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிவேக ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் பாகிஸ்தானில் உள்ள கோவிந்த்புரா என்ற பகுதியில் பிறந்தவர். இவர் ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் காமன்வெல்த் நாடுகள் போட்டியில் 400 மீட்டர் தடகளத்தில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். இந்தியா சார்பாக மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்துள்ளார். இவரை ரசிகர்கள் அன்பாக பறக்கும் சிங்கம் (ஸ்பிளையிங் சீக்) என்றே அழைக்கின்றனர்.
இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீரர் மில்கா சிங் #HBDTHEFLYINGSIKH!