இன்று பாகிஸ்தானில் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்தபுராவில் பிறந்து, இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்து, நாற்பது ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்தவர் 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங்.
1935ஆம் ஆண்டு பிறந்த இவர், பள்ளிப்படிப்பிற்காக 20 கிலோ மீட்டர் தூரங்களைத் தினந்தோறும் நடந்து சென்றுள்ளார். தனது பதினைந்து வயதில், இந்திய பிரிவினை கலவரத்தில் தனது கண்முன்னே குடும்பத்தினர் இறப்பதைக் கண்டவர். அப்போது மில்காவிடம் அவரது தந்தை கூறிய வார்த்தை '' ஓடு மில்கா, இல்லை உன்னையும் கொன்று விடுவார்கள், ஓடு மில்கா'' என்பது தான்.
அப்போது அவருக்கு அது புரியவில்லை. பின்னாட்களில் அந்த வார்த்தை தான் தனது வாழ்க்கையை மாற்றப்போகும் மந்திரம் என்று. கோவிந்தபுராவிலிருந்து தப்பித்த மில்கா, டெல்லியிலுள்ள தனது அக்காவின் வீட்டில் சிறிது காலம் தங்கினார். அதன்பின் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாலும், திருட்டு குற்றங்கள் சுமத்தப்பட்டதாலும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது அக்காவின் உதவியால் சிறையிலிருந்து வெளிவந்த மில்கா சிங், இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக முயற்சித்து தனது நான்காவது வாய்ப்பில் இணைந்தார். அப்போது அங்கு நடைபெற்ற கிராஸ் கண்ட்ரி ஓட்டப்பந்தயத்தில், ஒரு டம்ளர் பாலுக்காக ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து, ராணுவத் தடகளப் பிரிவில் இணைந்தார்.
அங்கிருந்து தொடங்கிய மில்கா சிங்கின் ஓட்டப்பயணம், அவரை 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கச்செய்தது. ஆனால், அவரால் அந்த ஒலிம்பிக் போட்டிகளில் சரியாகச் செயல்படாததால், பயிற்சியாளரின் நம்பிக்கையை இழந்தார்.
மீண்டும் தனது திறமைகளை மேம்படுத்திய மில்கா சிங், அதற்கடுத்த ஆண்டே கார்டிப்பில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் 46.16 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவரின் அச்சாதனையானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு இந்தியராலும் முறியடிக்க முடியாத சாதனையாகவே இருந்தது.
தொடர்ந்து தனது வேகத்தின் மூலம் பல்வேறு போட்டிகளில் இந்தியாவிற்காகப் பதக்கங்களை அள்ளி குவித்தார் மில்கா சிங். இதன் மூலம் உலகின் அதிவேக எட்டு தடகள வீரர்களில் ஒருவராக இடம் பிடித்து அசத்தினர். அதனைத் தொடர்ந்து 1960ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நூலிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார் மில்கா சிங்.
ஆனால், ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர மற்ற அனைத்து சர்வதேச தடகளப் போட்டிகளிலும் சாம்பியன் மில்கா தான். ஏனெனில் காமன்வெல்த் போட்டிகளில் ஒரு தங்கம், ஆசிய விளையாட்டுகளில் நான்கு தங்கம் என இந்தியாவிற்கு தடகளப்போட்டிகளில் பெருமை சேர்த்தார்.
அதன் பின் 1960இல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது, பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங். ஆனால், அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார். அந்தப் போட்டியின் தொடக்கத்திற்கு முன், பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் Vs மில்கா சிங் என்று அப்போட்டி விளம்பரப்படுத்தப்பட்டது. இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு, ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், அப்துல் காலிக்கை மின்னல் வேகத்தில் தோற்கடித்தார் மில்கா சிங்.
பரிசளிப்பு விழாவில், 'நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்' என்று மில்காவைப் பாராட்டினார் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் ஜெனரல் அயூப்கான். அங்குதான் அவருக்கு 'ஃபிளையிங் சீக் (பறக்கும் சீக்கியர்)' என்ற பட்டமும் அளிக்கப்பட்டது.
அந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய மில்கா சிங் கூறிய வார்த்தைகள் தான் இவை, 'பாகிஸ்தானில் ஓடும்போது, சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு வந்தது'. மேலும் அப்போது எனது தந்தை என்னுடன் கூறியது ''ஓடு மில்கா, இல்லை உன்னையும் கொன்று விடுவார்கள், ஓடு மில்கா '' என்பது தான்.
அதன் பின் மில்கா சிங்கை கெளரவிக்கும் விதமாக அவரின் பிறந்த நாளை அரசு விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் அவருக்கு அளித்தது இந்திய அரசாங்கம்.
பின்னர் இவரது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் சுயசரிதை புத்தகமான 'ரேஸ் ஆஃப் மை லைஃப்' புத்தகத்தை வெளியிட்டார் மில்கா சிங். இத்தகவலை அறிந்த பல பாலிவுட் தயாரிப்பாளர்கள் மில்கா சிங்கின் வாழ்க்கையைப் படமாக்குவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால், அவரின் மகன் மறுப்பு தெரிவித்ததால் படத்துக்கான ஒப்புதலை மில்கா சிங் தரமறுத்தார்.
அதனைத் தொடர்ந்து 'ரங் தே பசந்தி' படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு படத்துக்கான ஒப்புதலை அளித்தார். மேலும் படத்துக்கான உரிமத்தொகையாக ஒரு ரூபாயை மட்டுமே பெற்றுக் கொண்டார் மில்கா சிங். படத்தின் லாபத்தில் கிடைக்கும் 15 விழுக்காட்டை மில்கா சிங் தொண்டு நிறுவனத்துக்குத் தரவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
பின், 2013ஆம் ஆண்டு 'பாக் மில்கா பாக்' என்ற பெயரில் படம் வெளியானது. இத்திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் 164 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது. மேலும் 'இப்படத்தின் மூலம் இந்தியாவில் இப்போது என்னை எல்லோருக்கும் தெரிந்து விட்டது', என பட வெற்றி விழாவில் மில்கா சிங் குறிப்பிட்டது அனைவரின் கண்களிலும் நீரை வரவழைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனி நபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் என்ற சாதனைப் படைத்த ’பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங்கிற்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....#HBDTHEFLYING SIKH