டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள் துவக்க விழாவின் போது தங்கள் நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பு நடைபெறுவது மரபாகும்.
டோக்கியோ ஒலிம்பிக்
அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.
முதல் முறையாக இருவர் கொடி ஏந்துகிறார்கள்
ஒவ்வொரு நாட்டின் அணி சார்பிலும் ஒருவர் மட்டுமே தேசியக் கொடியை ஏந்திச் செல்வது வழக்கம். ஆனால், இந்தியா இந்த முறை பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் தேசியக்கொடியை ஏந்தி செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்தியா சார்பில் அபினவ் பிந்தரா தேசிய கொடி ஏந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யூரோ 2020: காலிறுதிப்போட்டியில் ஸ்பெயின் போராடி வெற்றி!