இரண்டாவது இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில், மகளிர் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஆறுமுறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், வான்லா டுவாட்டியுடன் மோதினார்.
இதில், ஆதிக்கம் செலுத்திய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம், அவர் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தங்கம் கைப்பற்றினார். இதேபோல், 60 கிலோ எடைப் பிரிவுப் போட்டியில் சரிதா தேவி 3-2 என்ற கணக்கில், சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இவர்களைத் தவிர, இந்திய வீராங்கனை ஜமுனா போரா (54 கிலோ), நீராஜ் (57 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சிவ தப்பா 5-0 என்ற கணக்கில் மணிஷ் கவுசிக்கை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அதேபோல், இந்திய வீரர் தீபக் (49 கிலோ), அமித் பங்கால்(52 கிலோ), அசிஷ் (69) கிலோ ஆகியோரும் தங்கம் வென்றனர். இந்தத் தொடரில், இந்திய நட்சத்திரங்கள் மொத்தம் 12 தங்கம், 18 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை குவித்துள்ளனர்.