கத்தார் தலைநகர் தோஹாவில் 14ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 17 வயதே ஆன இந்திய வீராங்கனை மனுபாக்கர் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் அவர் 244.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்ததோடு தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். சீன வீராங்கனைகள் குயான் வாங், ரன்க்ஸின் ஜியாங் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்ளைப் பிடித்தனர். இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை யஷ்வினி சிங் தேஷ்வால் ஆறாம் இடம்பிடித்தார்.
10மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவாளன், அன்ஜும் மோத்கில், அபூர்வ சந்தீலா ஆகியோர் அடங்கிய அணி 1883.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. இதே போன்று இளையோர் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் விவான் மற்றும் மனீஷா ஆகியோர் தங்கம் வென்றனர். அவர்கள் சீன இணையை 34-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினர்.
முன்னதாக 10மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் தீபக் குமார் வெண்கலம் வென்றதோடு அடுத்தாண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் கலந்து கொள்ளும் பத்தாவது இந்தியராக அவர் தகுதி பெற்றுள்ளார்.