12வது ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் தைபே நாட்டின் டாவோயுவான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பேக்கர் (17 வயது), இந்திய வீரர் சவுரப் சவுத்ரி (16 வயது) இணை பங்கேற்றனர்.
இந்த தொடரில் முதலில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் மனு பேக்கர், சவுரப் சவுத்ரி இணை 784 புள்ளிகளை பெற்று உலக சாதனையை முறியடித்தது. ஐந்து நாட்களுக்கு முன்பு, நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரஷ்யாவின் விட்டலினா பத்ரசாஷ்கினா, ஆர்ட்மெம் செர்னவ்சோவ் ஜோடி உலக சாதனை படைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இந்த தொடரின் இறுதி சுற்றில் மனு பேக்கர், சவுரப் சவுத்ரி இணை 484.8 புள்ளிகளை எடுத்து முதல் இடம் பிடித்தனர். இதன் மூலம் இவர்கள் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்த இணை கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களைத் தொடர்ந்து, கொரியாவிந் வாங் சியோன்ஜியன், கிம் மோஸ் 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தைபேயின் வூ சியா யிங், கவ் குவாந் - டிங் 413.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.