யார் இந்த ஹம்பி?
உலக சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனது 15ஆவது வயதிலேயே வென்று உலக சாதனை படைத்தவர் கொனேரு ஹம்பி. சிறு பிள்ளை பருவமான தனது பத்தாம் வயதில் சதுரங்கப் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்று இந்தியாவை வியப்பில் ஆழ்த்தியவரும் இவரே.
அதுமட்டுமில்லாமல், 2600 புள்ளிகளுக்கு மேல் பெற்று உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார் ஹம்பி. இது இந்திய வீராங்கனை ஒருவர் பெறும் முதலாவது பட்டமாகும். ஆனாலும், அவரின் சாதனைப் பட்டியல் இத்துடன் முடியாமல், நீண்டுகொண்டே சென்றது.
அவரின் சாதனைப் பட்டியல் மகுடத்தில் மேலும் வைரக்கல் பதிக்கும் விதமாக, மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு உலக சாம்பியன்களுடன் மோதிய ஹம்பி, ரேபிட் சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதில் ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், திருமணம், குழந்தை என மூன்று வருடங்கள் கழித்து ஆட்டத்தில் களமிறங்கிய ஹம்பி தனது வண்ன இறக்கைகளுடன் பறந்து உலகில் மிக மிக உயர்ந்த இடத்தை தொட்டதுதான்.
விஸ்வநாதன் ஆனந்த்தின் ஆசை:
சதுரங்கத்தின் பூர்வீகமான இந்தியாவை தனது மூளையின் நகர்வுகளால் உலக அரங்கில் உயர்த்திக் காட்டியவர் விஸ்வநாதன் ஆனந்த். சர்வதேச அளவில் தனக்கான ஒரு தனி இடத்தை உருவாக்கி இந்தியாவின் முகமாக திகழ்பவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் விளையாடிய சமகாலத்தில்தான் கொனேரு ஹம்பியும் மகளிர் சதுரங்கப் போட்டியில் பல உலக சாதனைகளையும் புரிந்துகொண்டிருந்தார். ஆகவே தான் ஹம்பியும் இந்திய மகளிர் சதுரங்கத்தின் முகமாகப் பார்க்கப்படுகிறார்.
1997ஆம் ஆண்டில் பத்தே வயதான ஹம்பி 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 1998இல் நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி, 2000ஆம் ஆண்டு நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி என அடுத்தடுத்த உலக ஜூனியர் சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களில் தன் பெயரைப் பொறித்தார் கொனேரு ஹம்பி.
2002ஆம் ஆண்டு (15 வயது 67 நாட்கள்) இளவயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்று புகழ்பெற்ற ஜூடித் போல்கர் என்பவரின் சாதனையைத் தகர்த்தெறிந்தார் ஹம்பி. இதற்குப் பின்னும் பல சாதனைகளை அவர் படைத்திருந்த போதிலும், உலக சீனியர் சாம்பியன்ஷிப் பட்டம் ஹம்பிக்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்தது. ஹம்பி, தனது வரலாற்றில் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை சேர்க்க வேண்டும் என்பதே செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்தின் விருப்பமும். இது இந்திய சதுரங்க ரசிகர்களின் விருப்பமும் கூட.
குழந்தைக்காக தங்கம் பெற்ற சதுரங்க மங்கை:
இந்தியாவில் பிறக்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒரு எழுதப்படாத விதி உண்டு. திருமணமாகி தாய்மையடைந்த பிறகு அவர்கள் விளையாடமாட்டார்கள் என்பதே அது. விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழிக்கேற்ப, 2014ஆம் ஆண்டு தாசரி அன்வேஷை மணந்த ஹம்பி, அடுத்த ஆண்டே உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று, அந்த விதியை மாற்றி எழுதினார். எனினும், அவர் தாய்மையடைந்ததன் காரணமாக தனது சதுரங்க ஆட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு களத்திற்கு வந்த ஹம்பியின் மீது, விட்டுச்சென்ற இடத்தை அதேபோல் அவரால் இனி தொடர முடியுமா? அவரால் சாதிக்க முடியுமா என்று பலர் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். ஆனால், அடுத்து ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் ருத்ரதாண்டவம் ஆடி அனைவரது வாய்க்கும் பூட்டு போட்டார்.
ஆம், சர்வதேச அளவில் பயிற்சி மேற்கொள்ளாமல் தனது தந்தையின் உதவியோடு தனது பழைய ஆட்டத்தை மீட்டெடுத்தார் ஹம்பி. தான் மீண்டும் ஆட வந்த ஆண்டே கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஹம்பி. இதன்மூலம் சதுரங்க வாழ்க்கையின் மிகப்பெரிய உயரத்தையும் அவர் அடைந்தார்.
இந்திய சதுரங்க ரசிகர்கள் எதிர்பார்க்காமலும் ஊடகங்கள் கூட ஹம்பி பங்கேற்ற போட்டியை கண்டுகொள்ளாத நிலையில், உலக ரேபிட் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார் ஹம்பி. விரைவான நேரக் கட்டுப்பாட்டின் கீழ் விளையாடி, அடுத்தடுத்த ரவுண்டுகளில் நகம் கடிக்க வைக்கும் வகையில் முன்னேறி பரபரப்பான டைபிரேக்கரில் எதிராளியான லீ டிங்ஜியைத் தோற்கடித்து பட்டத்தை வென்றார்.
ஹம்பியை விரும்பிய ’உலக சாம்பியன் பட்டம்’ :
மூன்று வருட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் சதுரங்கத்துக்குள் நுழைந்த ஹம்பி, அதிவேக நகர்வுகளைக் (Quick move) கொண்ட ரேபிட் போட்டிகளில் ஆர்வம் காட்டாமல், கிளாசிக் எனப்படும் அதிக நேரத்துடன் விளையாடும் போட்டிகளிலேயே ஆர்வம் காட்டியுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றால் போதும் என்ற மனநிலையில்தான் உலக ரேபிட் சதுரங்கப் போட்டியில் ஹம்பி கலந்துகொண்டுள்ளார்.
இருப்பினும், குறைந்தளவு நம்பிக்கையுடன் போட்டியை தொடங்கிய ஹம்பி, சாம்பியன் பட்டத்தை வெல்வார் என கருதப்பட்ட லி டிங்ஜியை இறுதிச்சுற்றில் ஆட்டம் காண செய்தார். இதுதான் ஹம்பியை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல ஊக்குவித்தது என்றே கூறலாம். கூடுதல் நம்பிக்கையுடன் ஆடிய ஹம்பி டைபிரேக்கரில் லீ டிங்ஜியை வீழ்த்தி யாரும் எதிர்பாரா வண்ணம் உலக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
ஆட்டம் முடிந்து கருத்து கூறிய ஹம்பி, “ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆட்ட வகைகள் எனக்கு விருப்பமான விளையாட்டு வகையல்ல. மேலும், கடைசி நாளில் போட்டி ஆரம்பித்ததைப் பார்த்தபோது, நான் பட்டத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. நான் டைபிரேக் வரை விளையாடுவேன் என்று கூட நினைக்கவில்லை. ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதன் மூலம் உலக பட்டத்தை வென்றது மிகவும் திருப்தியளிக்கிறது” என்றார்.
’ஹம்பி’ என்ற பெயருக்குள் ஒழிந்திருக்கும் சுவாரஸ்ய கதை!
கொனேரு ஹம்பியின் தந்தை கொனேரு அசோக், ஒரு விளையாட்டு வீரர். பள்ளி அளவில் பல போட்டிகளில் விளையாடிய அவர், பின்னர் சதுரங்கத்தை பிரதானமாக்கிக் கொண்டார். தேசிய அளவில் பல சதுரங்கப் போட்டிகளில் விளையாடினார். விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட அவர், தனது குழந்தைக்கு விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய ஒரு தனித்துவமான பெயர் இருக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவர் சாம்பியன் என்ற ஆங்கில வார்த்தையின் நடுப்பகுதியை எடுத்து தேர்வு செய்து தனது பெண் குழந்தைக்கு (cHAMPIon) ‘ஹம்பி’ என்ற பெயரைச் சூடினார்.
அதன்பின் தனது மகளையும் சதுரங்க விளையாட்டிற்குள் கொண்டுவந்தார் அசோக். அவரது நம்பிக்கையை பூர்த்திசெய்யும் வகையில், ஹம்பி உலக சாம்பியனாகவும் மாறினார். ’Hampi’ என்று தனது தந்தை வைத்த பெயரைக் கொண்டு பல சாதனைகள் புரிந்திருந்தாலும், சமீபத்தில் அப்பெயரை 'Hampy' என்று மாற்றிக்கொண்டார் என்பது தனிக்கதை. ஐந்து உலக சாம்பியன் பதக்கத்தை வென்று, உலகின் நீள் உயரத்தை தொட்டு, ‘சதுரங்க இளவரசி’ ஆகவும் மாறியிருக்கிறார். மென்மெலும் பல உயரங்களை எட்ட அவருக்கு வாழ்த்துகள்!
இதையும் படிங்க: எந்த காம்பினேஷன் சிறந்தது? ரஹானேவுக்கு பதில் கொடுத்த சச்சின்!