இந்தியாவில் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2018ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இத்தொடர் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 17 மற்றும் 21 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளாக நடைபெறுகின்றன.
அந்தவகையில், இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கவுள்ளது. இதில், 451 பதக்கங்களுக்கு மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், இந்தத் தொடர் குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,
"இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட இந்தத் தொடர் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும். மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து என எந்த போட்டிகளை எடுத்துகொண்டாலும் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது. முந்தைய காலத்தைவிட தற்போது பல்வேறு பதக்கங்களை நாம் வென்றுள்ளோம்.
இதேபோல் நாம் தொடர்ந்து முன்னேறினால் நிச்சயம் நமது லட்சியமான 2028, 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: பாட்டில் கேப் சேலஞ்ச் செய்த கிரண் ரிஜிஜு!