மங்களூரு (கர்நாடகா): கம்பலா விளையாட்டு வீரர் ஸ்ரீநிவாஸ் கடந்த ஆண்டு படைத்த சாதனையை இந்த ஆண்டு முறியடித்தார்.
கர்நாடகாவின் கடற்கரை மாவட்டங்களில் கம்பலா போட்டிகள் பிரபலம். இரு எருமைகளை பூட்டிக் கொண்டு அதன் கயிரை விடாமல் எருமை மாடுகளுடன் பந்தய தூரத்தை கடக்க வேண்டும். கடந்தாண்டு நடந்த இந்தப் போட்டிகளில் ஸ்ரீநிவாஸ் கவுடா என்னும் இளைஞர், 100 மீட்டர் பந்தய தூரத்தை 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
இந்தச் சாதனையால் ஸ்ரீநிவாஸ் கவுடா சர்வதேச அளவில் கவனம் பெற்றார். அதிவேக மின்னல் மனிதன் உசேல் போல்ட்டின் சாதனையை முறியடித்துவிட்டார் என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டார். இந்தநிலையில் கடந்த வாரம் மங்களூரு மாவட்டம் பெல்தாங்கடி தாலுகா வேணுர்-பெர்முடா பகுதியில் சூர்ய சந்திர ஜோடுகரே என்ற அமைப்பு சார்பில் கம்பலா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் பிரபல வீரர் ஸ்ரீநிவாஸ் கவுடா கலந்துகொண்டு பந்தய தூரத்தை வெற்றிகரமாக கடந்து முதல் பரிசை தட்டிச் சென்றார். இம்முறை அவர், கடந்தாண்டு சாதனையை முறியடித்தார். அப்போது அவர் 100 மீட்டர் பந்தய தூரத்தை 8.96 விநாடிகளில் கடந்தார். அடுத்து நடந்த மூத்தோர் பிரிவு போட்டியில் பந்தய தூரத்தை 100 மீட்டர் தூரத்தை 8.78 விநாடிகளில் கடந்தார்.
கம்பலா என்பது கர்நாடகாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பந்தயமாகும், அப்போது மக்கள் எருமை மாடுகளுடன் நெல் வயல்களில் ஓடுவார்கள். முன்னதாக ஸ்ரீநிவாஸ் கவுடா, 125 மீட்டர் நீளமுள்ள கம்பாலா பாதையை 11.21 வினாடிகளில் கடந்தார். வேகத்திற்கு எதிரான தூரத்தை கணக்கிடும்போது, அவர் 100 மீட்டரை வெறும் 8.96 வினாடிகளில் கடந்து, தனது முந்தைய சாதனைகளை முறியடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.